தமிழ் தேசியம் என்பது பாசிசமா ?!

தமிழ் தேசியம் என்பது பாசிசமா ?!

 தன்னுரிமை இழந்து தவிக்கும் ஒரு தேசிய இனம் தனக்கான முகவரியை நிறுவிட முனையும் போது அதன் மூச்சை நிறுத்திவிட அதிகார வர்க்கம் கையில் எடுக்கும் ஆயுதமே பாசிசம் !

 

சமய வெறியை முன்னிறுத்தி அல்லது சாதி வெறியை முன்னிறுத்தி பிழைப்பு நடத்தும் பிழைப்புவாத கூட்டங்களாலும் சமய எதிர்ப்பை, சாதி ஒழிப்பை முன்னிறுத்தி பிழைப்பு நடத்தும் கூட்டங்களாலும் அடிமைப்பட்ட ஒரு தேசிய இனம் தனக்கான முகவரியை நிறுவிட பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது !

 

பிற தேசிய இனங்களுக்கு இல்லாத ஓர் சிக்கல் தமிழர்களுக்கு உண்டு. ஒட்டு மொத்த தமிழ் தேசியர்களும் ஒரு குடையின் கீழ் தமிழர்களை ஒன்றிணைக்க இம்மண்ணிலிருந்து தோன்றிய ஓர் சமயம் இல்லை ! சாதி என்னும் குல குடும்ப அடையாளங்கள் தீண்டாமை என்னும் சேற்றுக்குள் பதித்து வர்க்க பிரிவினையை பொருளாதார அடிப்படையினின்று வேறுபடுத்தி, குலத்தின் அடிப்படையிலான வர்க்க பிரிவினையாக பிராமணியத்தால் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

 

ஓர் மக்கள் சமுதாயத்தின் முன் சமூக மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது எனும் பொழுது, அங்கே எது பிரதான காரணியாக உருவெடுத்திருக்கிறதோ, அங்கிருந்துதான் தொடங்கியாக வேண்டும் !

 

சாதி, சமயம், பெண்ணியம் எல்லாம் நம் தமிழ் சமூதாயத்தின் உள் முரண்பாடுகளாகும்.

 

புற காரணமான தேசிய இன ஒடுக்குமுறையை மறைக்கவே சாதி, சமய, பெண்ணியம் சார்ந்த அகக்காரணங்கள் முதன்மை படுத்தபடுகின்றன.

 

புறக்காரணத்தின் ஒவ்வொரு அசைவும் ஒரு சமூதாயத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் அதன் ஆணி வேர் வரை பாய்கிறது.

 

இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்கிறார்கள். வல்லரசு என்றால் எளியவனை வலியவன் ஆட்கொண்டு அடிமையாக்கி சுரண்டி பிழைப்பது தானே ! அமெரிக்கா அதை செய்யும் பொழுது அது தவறு ! நாம் செய்தால் அது சரியா !

 

இந்தியாவை தன்னிறைவு பெற்ற தேசமாக, வல்லரசுகளின் வலிமையை எதிர் கொள்ளும் தேசமாக ஆக்குவேன் என்று எவனாவது சொல்கிறானா !

 

தமிழகத்தில் தமிழ் தேசியர்கள் ஒருமித்த கருத்தாளுமைக்குள் வராது இருப்பதற்கும், பின்னடைவை சந்திப்பதற்கும், தமிழர்களிடையே தமிழ் தேசிய ஓர்மை வளமை பெறாமல் போவதற்கும் தமிழ் தேசியவாதிகளே காரணமாகின்றனர் ! தமிழ் இன விடுதலைக்குள் திராவிடத்தையோ, ஈ.வெ.ரா.வையோ பிரித்தறியா காரணத்தாலேயே தமிழ் தேசியம் பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. பொய்யான திராவிடத்தை அல்லது திராவிடத்தை புனிதம் என போற்றும் கருத்தடிமை தமிழர்கள், தமிழ் தேசியர்கள் என்ற போர்வையில் தமிழ் தேசியத்தை திராவிட தேசியத்துக்குள் சறுக்கி விழச் செய்து விடுகின்றனர் !

 

ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனம், தன் அழிவின் விளிம்பில் கூட வீறுகொண்டு எழவில்லையாயின், அது முற்றாக அழிந்தே போய் விடும். அவ்வினத்தின் எழுச்சியை பாசிசம் என்பார்களானால் பாசிசத்திற்கு எதிர் நிலை பாசிசமே ! அது அவசியமே !

 

ஈழ தமிழர்களை அழித்தொழித்த ஆரியர்கள் பேசும் போலி மத நல்லிணக்கமும், பிராமணியம் உயர்த்தி பிடிக்கும் இந்துத்துவமும், திராவிடவாதிகளின் திராவிட தேசியமும் சோசலிசமா ! பாசிசம்தானே !

 

“வீழ்ந்து கிடக்கும் அடிமைகள் கையில் எடுக்கும் ஆயுதம் எதுவென அவனை அடக்கி ஆளும் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்”.

 

தமிழ் தேசம் மலருமா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/07/blog-post_3.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக