தமிழும், ஈ.வெ.ரா.வும்:-

 

தமிழும், ஈ.வெ.ரா.வும்:-


 

வடுகனும், கன்னடனும், மலையாளியும் அவனவன் பூர்வீக மண்ணில் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என்பார்கள். தமிழகத்தில் பிழைக்க வரும் பொழுது, நாம் எல்லோரும் திராவிடர்கள் என்பார்கள்.

 

 

தமிழகத்தில் முதல் முறையாக இந்திக்கு 1922ல் விளக்கு போட்டவர் ஈ.வெ.ரா., பேராய கட்சியில் இருந்த போது ஈரோட்டில் இந்தி பள்ளி ஒன்று ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். பேராய கட்சியில் இருந்து விலகிய பின் அக்கட்சிக்கு எதிர் நிலையாகத் தான் இந்தியை எதிர்தாரே அன்றி, உணர்வால் அல்ல !

 

 

ஈ.வெ.ரா., இந்தியை தமிழ் பற்றால் எதிர்க்கவில்லை ! பேராயத்தை தாக்க இந்தி எதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய் கிடைத்தது என்று வெளிப்படையாய் சொன்னார் என்று தேவநேய பாவாணர் கூறுகிறார். பேராயக் கட்சியில் இருக்கும் போது ஆதரித்தது, பின் அதை விட்டு விலகிய பிறகு அதற்கு எதிர் நிலை அரசியல் செய்ய இந்தி எதிர்ப்பை கருவியாக்கி கொண்டது. அதன் பின், தமிழர்களிடம் இந்தி எதிர்ப்பு தன்னியல்பாக எழுவதை கண்டவுடன் காமராசரை ஆதரிப்பது மூலம் தமிழுக்கு கேடு செய்ய நினைத்தது, இப்படி மாறி, மாறி நிலை பாடு எடுத்து தமிழுக்கு தீங்கு விளைவித்து, தன் திராவிட சகாக்களை கொண்டே அறுவடை செய்ய வித்திட்டார் ஈ.வெ.ரா.

 

 

திராவிடவாதிகள் தங்களுக்குள் சண்டை இட்டு கொள்வதும், பின் தேவைப்படும் பொழுது கூடிக்கொள்வதும் தமிழனை ஏமாற்றும் சூட்சும அரசியலாகும்.

 

 

இறை நம்பிக்கை உள்ள தமிழ் அடிமைகள் அன்று வடுக பிராமணனை (சங்கராச்சாரியாரை) பல்லக்கில் தூக்கினால், இறை மறுப்புள்ள தமிழ் அடிமைகள் வடுக கன்னடனுக்கு (ஈ.வெ.ரா.) பல்லக்கு தூக்கினர். இன்றோ வடுக யாதவனுக்கு (கீ.வீரமணி) பல்லக்கு தூக்குகின்றனர்.

 

 

01/06/1954ல் வெளியான விடுதலை இதழில் ஈ.வெ.ரா., சொல்லுவது - நீ ஒரு கன்னடியன், எப்படி தமிழனுக்கு தலைவனாக இருக்கலாம் என்று என்னை கேட்கிறார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா என்றேன் என்கிறார்.

 

 

03/03/1965ல் விடுதலை இதழில் தலையங்கத்தில், இந்தி விசயத்தில் நீதானே எதிர்ப்பை உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாராக எனக்கு வசவு கடிதம் எழுதி வருகிறார்கள். தமிழ் கெட்டு விடுமே என்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவுமே இல்லை ! புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள். காமராசர் ஆட்சி அவசியமா அல்லது இந்தி ஒழிய வெண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால், காமராசர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாக சொல்லுவேன் என்கிறார்.

 

 

தமிழ் என்றுமே கெட்டதில்லை ! ஆனால் விஜய நகர ஆட்சியில் தமிழ் புலவர்கள் கெட்டனர். மூவேந்தர்கள் ஆட்சியிலும், களப்பிரர்கள் ஆட்சியிலும் தமிழ் புலவர்கள் போற்றப்பட்டனர். இதனால் வளமான, மக்களுக்கான அறம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டன. பிராமணியம் அரச தலைமையில் ஒட்டிக் கொண்ட பின்பும், மொகலாயர் ஆட்சியிலும், வடுக விஜய நகர ஆட்சியிலும் தான் தமிழ் புலவர்கள் அரசு ஆதரவின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். வயிறு வளர்க்க வடுக மன்னர்களையும், செல்வந்தர்களையும் போற்றிப் பாடி, பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு கெட்டனர். அது இன்றுவரை தொடர்கிறது. வடுக தலைமையை போற்றி பாடினால் மட்டுமே, வறுமை இன்றி செழிப்பாக வாழ முடிகிறது.

 

 

தமிழ், தமிழர், தமிழ் நாடு, தமிழ் அரசு என்று கூற கூடாதென்றும் திராவிடம், திராவிடர் திராவிட நாடு, திராவிட அரசு என்று தான் சொல்ல வேண்டும் என்றும், தமிழை முதன்மை படுத்துவோர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் பேசி வந்தார்.

 

 

கேரளத்திலோ, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ சென்று அவர்கள் மொழி, தேசியம் குறித்து அம்மக்களை பார்த்து பித்தலாட்டக் காரர்கள் என்று கூறினால் சும்மா விடுவார்களா ! அல்லது ஈ.வெ.ரா., அங்கு சென்று இப்படி பேச முடியுமா ! அல்லது அவரின் இன்றைய சகாக்கள் தான், அந்த தேசங்களில் சென்று பேசிவிட்டு உயிரோடு திரும்பி விடுவார்களா ! இவர்களின் கால்களில் விழுந்து கிடக்கும் தமிழர்களில் சில திராவிட அடிமைகள் தங்களை நான் தமிழன் ஆனால் திராவிடன் என கிறுக்கன்களை போல் பேசி திரிகிறார்கள்.

 

 

திராவிடனென்றால் தமிழனின் மண், வளம், செல்வம், உழைப்பு, அரசியல் அனைத்தையும் திருடிக்கொண்ட திருடன் என்று அர்த்தம் !

 

 

தங்கள் மீது சுமத்தப்பட்ட உண்மையான இழிச்சொல்லை தான் மு.கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று எழுதினார்.

 

 

வேலிக்கு ஓணான் சாட்சி ! ஓணானுக்கு வேலி சாட்சி ! நமக்கு இரண்டும் ஒன்று தான் !

 

 

அதனால் தான் நாம் தமிழர்கள் யாரும் இந்து என்றோ, திராவிடன் என்றோ சொல்ல வேண்டாம் என்கிறோம்.

 

 

ஆரியத்தால் இந்துவாக்கப் பட்டோம் ! வடுகத்தால் திராவிடர் ஆக்கப்பட்டோம் !

 

 

இனி தமிழன் தமிழனாகவே வாழ்வோம் !

 

 

வடுகத்தின் வல்லாதிக்க திமிர் ! என்ற கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2019/02/blog-post.html

 

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).   

 

காமராசர் எதை செய்தார் ?!

 

காமராசர் எதை செய்தார் ?!

 


காமராசர் பற்றி ஒரு பதிவு போதும் என நினைத்தேன். காமராசர் பக்தர்களுக்கும், ஈ.வெ.ரா. பக்தர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டபடியால் மேலும் விளக்க வேண்டியுள்ளது.

 

 

காமராசர் அதை செய்தார், இதை செய்தார் கல்வியை, மதிய உணவை இலவசமாக தந்தார். தொழில்நுட்ப கல்வியை உருவாக்கினார், தொழில் சாலைகளை உருவாக்கினார், அணை கட்டி நீர் மேலாண்மையை செயல் படுத்தினார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதில் நூற்றுக்கு எம்பது சதம் மத்திய அரசு கொண்டுவந்த நலதிட்டங்கள் ஆகும்.

 

 

ஒரு கட்சியானது ஆட்சிக்கு வந்துவிட்டால் அது மக்களுக்கான நல திட்டங்களை செய்யதான் வேண்டும். அது ஒரு அரசின் கடமையாகும். காமராசருக்குப் பின் வந்த அரசுகளும், அதன் தலைவர்களும் தமிழ் நாட்டுக்கு நல திட்டங்கள் செய்யவே இல்லையா ! காமராசருக்கு பின் நல திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லையா ! காமராசருக்கு பிறகு வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாரும் நல திட்டங்கள் செய்ய வில்லையா ! சுதந்திரத்திற்கு பின் அரசை பொறுப்பேற்றவர்கள் தொடங்கி வைத்த மக்கள் நல திட்டங்களை அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் மேம்படுத்தி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவில்லையா !

 

 

சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ்காரன் நாட்டை முன்னேற்றவில்லையா ! வடுக விஜய நகர பேரரசும், அதன் தொடர்ச்சியான வடுக பாளைய காரன்களின் அட்டுழியங்களால் பலவீனப்படுத்தப்பட்ட தமிழகம் வளமாகவில்லையா ! உடன் கட்டை ஏறுவது, குழந்தை திருமணங்களை தடை செய்யவில்லையா ! மாட்டு வண்டிக்கு மாற்று தெரியாத நமக்கு புகை வண்டி, பேருந்து, மோட்டார் வாகனங்கள் என அறிவியல் கண்டு பிடிப்புகள் நம்மை வந்து சேரவில்லையா ! நூற்பாலைகள் தொழிற்சாலைகள் நிறுவப்படவில்லையா ! இங்குள்ள வருணாசிர்மத்தின் தீண்டாமையை பிரிட்டன் ஆளுநர்கள் எதிர்க்கவில்லையா ! இருப்பினும் வெள்ளையனை வெளியேறும்படி போராடினோம். அவனால் நமக்கு அறிவு வளர்ச்சியில் நன்மையும், பொருளாதாரம் மற்றும் வாழ்வியலில் தீமையும் என உணர்ந்ததால் வெளியேறும் படி கூறினோம்.

 

 

பிரிட்டனும் இந்தியாவும் ஒரே நாடாகத்தானே இருந்தது. பல நாடுகளை ஒன்றிணைத்து ஒரே நாடாகத்தானே வைத்திருந்தான். அதில் இருந்து தானே நாம் பிரிந்தோம் ! பிரிட்டன் வருகைக்கு முன் இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்ததில்லை என்பது தானே உண்மை !

 

 

இந்தியாவில் மையபடுத்தப்பட்ட வட இந்திய ஆட்சியாளர்களால் பிறமொழி பேசுபவர்களிடம் இந்தியை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவை உருவாக்க தேசபக்தி என்ற பெயரில் அடக்குமுறை சட்டங்களையும், பிற மொழிகளை அழித்துவிடும் வேலைகளையும், குறிப்பாக தமிழகத்தை சிதைப்பதன் மூலம் இன்றைய இந்தியாவை இந்தி இந்தியாவாக்க காமராசர் முனைந்தார் என்பதாலேயே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். இந்தியை எதிர்த்து போராடிய மக்களை பார்த்து, பத்து காலிகளையாவது சுட்டு தள்ளவேண்டும் என ஈ.வெ.ரா., திராவிட பண்பில் இருந்து இந்தியத்தை உசுப்பேற்றியதால் காமராசரோடு சேர்த்து ஈ.வெ.ரா.,வையும் விமர்சிக்க வேண்டியுள்ளது. மேலும் தமிழ் மொழி, இனம், பண்பாட்டுக்கு எதிராக ஏராளமான விசம பிரச்சாரங்களை செய்தார் ஈ.வெ.ரா. அதற்கேற்ற அரசியலையும் செய்தார்.

 

 

மிக சிறந்த யோக்கியனான காமராசரை இன்று முட்டுக் குடுத்து தாங்குபவர்களின் பாட்டனும், அப்பனும் தான் வாக்களிக்காமல் தோல்வியுற செய்தார்கள். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் முட்டாள்களா ! வலியும் வேதனையும் அந்த ஆட்சி காலத்தில் வாழ்ந்தவனுக்கு தானே தெரியும் !

 

 

மதிய உணவு கொடுத்தாவது அரசு பள்ளியை நடத்தினார். மேலும் புதிய இலவச கல்வி சாலைகளை திறந்தார், ஏன் தெரியுமா ? தமிழர்களை இந்தி இந்தியனாக்க வேண்டும். பள்ளிக்கே வராதவனுக்கு இந்தியை எப்படி கொண்டு போய் சேர்ப்பது. எல்லா குழந்தைகளையும் பள்ளிக்கு வரவழைத்து விட்டால் அடுத்த தலைமுறையை இந்தி பேசும் இந்தியனாக மாற்றிவிடலாம் என்பது காமராசரின் கனவு !

 

 

நதி நீர் மேலாண்மைக்கு வித்திட்டார் காமராசர் ! ஆனால் நதியால் வரும் நீர் உற்பத்திக்கான இயற்கை வளங்கள், நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாம் அடுத்தவன் கையில் தாரை வார்த்தார். பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் பகுதிகளை எல்லாம் பிற தேசிய இனங்களிடம் கையளித்து, அங்கே சிறுபான்மை தேசிய இனங்களாக்கி, அகதிகளாக்கிவிட்டார்.

 

 

வட வேங்கடம், தென் குமரி ஆயிடை கூறும் தமிழ் உலகம் காமராசரால் வீழ்த்தப்பட்டது ! பின் எப்படி ? போற்றுதலுக்குரிய தமிழின பெருந்தலைவனாக ஏற்கமுடியும் !

 

 

திருப்பதி, சித்தூர், மைசூர், பெங்களூர், பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி மாவட்டம் முழுவதும், சபரி மலை என அனைத்தும் தமிழகத்தின் எல்லைகளாக இருந்து தமிழக மண்ணை வளமாக்கிய பகுதிகளாகும். எல்லாம் பறிபோனது ! தமிழ் தேசத்தின் உட்புறங்களில் இருந்த இயற்கை நீர் மேலாண்மையால் மிகுந்திருந்த மண்ணின் ஈரப்பதத்தை காலி செய்ய முடிவே இல்லா வளர்ச்சிகாணும் சீமை கருவேல விதைகளை விதைத்து, தமிழகத்தை வறண்ட பாலை நிலமாக்கினார் காமராசர். அதன் பின்னால் உள்ள அரசியலை எவனும் பேசுவதில்லை. கேட்டால் அவர் அறியாமையால் செய்தார் என்பார்கள். ஒன்றுமே தெரியாமலா ?! அகில இந்திய காங்கிரஸ் தலைவனாகவும், காங்கிரசையும், இந்தியாவையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தார்.

 

 

தமிழன் வாழ, நமக்கு பின்னே நடந்தவைகளையும், நமக்கு முன்னே நடப்பவைகளையும், இனி நடக்கப் போவதையும் அரசியலாய் பாருங்கள் உண்மை வெட்ட வெளிச்சம் ஆகும் ! தமிழ் இனம் தப்பி பிழைக்கும் !

 

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).    

 

காமராசர் தமிழினத்துக்கு ஓர் விபத்து !

காமராசர் தமிழினத்துக்கு ஓர் விபத்து !

 


 

பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் தமிழகத்தில் சிலரால் போற்றப்படும் காமராசரை தமிழ் நாட்டின் பேராய கட்சிக்காரர்களை விட, தமிழ் தேசியம் பேசுகிறவர்களே அதிகம் காமராசர் புகழ் பாடுவதை பார்க்க முடிகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே காமராசரால் தமிழர்களுக்கு விளைந்த தீமைகளை சுட்டிக் காட்டுகின்றனர்.

 

 

காமராசர் தமிழன் என்றும், தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்றும் காமராசருக்கு வாக்களிக்க கோரியவர்தான் ஈ.வெ.ரா. ! காமராசரின் ஆட்சி காலத்தில் அவருக்கு பக்க பலமாய் இருந்தவர் ஈ.வெ.ரா.

 

 

இந்திய தேசிய அரசியலைக் கொள்கையாகக் கொண்ட ஒரு தமிழனை வைத்து, தமிழகத்தின் எல்லைகளை சிறுமைப் படுத்தி, தமிழ் மொழி மீது இந்தி மொழி மூலம் ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களின் மீது அடக்குமுறையை ஏவி, இன ஓர்மைக்கு எதிராக வகுப்புவாதத்தை ஊக்குவித்து, மண்ணை மலடாக்கி தமிழர்களுக்கு துன்பம் விளைவித்து, இந்திய தேசிய முதலாளிகளுக்கு சேவை செய்வதன் மூலம் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளானவர் காமராசர். இதில் அரசியல் வெற்றி பெற்றார் வடுக கன்னடர் ஈ.வெ.ரா.

 

 

காமராசரால் தமிழ் தேசியம் வீழ்த்தப்பட தமிழர்களை மொத்தமாக அரசியல் அறுவடை செய்ய காத்திருந்து, இந்திய தேசிய அரசியலை வீழ்த்தி வெற்றி கண்டது திராவிட தேசியம் !

 

 

பாவம் ஒரு பக்கம் ! பழி ஒரு பக்கம் ! பலனை விழுங்கி ஏப்பம் விட்டவன் நடு பக்கம் !

 

 

கரையில் கரடிக்கு பயந்து நீரில் குதித்து முதலையிடம் மாட்டி கொண்டான் தமிழன் !

 

 

ஒருவன் நல்லவன், வல்லவன், கொடையாளி, நேர்மையானவன், ஊழல் அற்றவன், கை சுத்தமானவன் என்பதெல்லாம் ஒரு தேசியத்தின் உயர்ந்த பட்ச தலைவன் என ஏற்க பயன்படும் முழு தகுதிகள் அல்ல ! இவை எல்லாம் துணை தகுதிகள் தான் ! அவன் கொண்டிருக்கும் அரசியலே முதன்மையானது ஆகும். அவன் பின்பற்றும் கொள்கையே அவனுக்கு அடையாளமாகும்.

 

 

உணர்வால் தமிழனாக வாழாது, இந்தி, இந்தியனாக வாழ்ந்தவனை, தமிழ் தேசிய இனத்தின் முரண்பட்ட அரசியலை ஒரு பொருட்டாக மதிக்காத, பாதிக்கப் படுபவன் தமிழன் தான் என்பதை அறிந்தும், இந்திய தேசிய அரசியலுக்கு சேவை செய்தவனை, தமிழ் இனத்தின் பெருந்தலைவனாக ஏற்பது, ஏற்கச் சொல்லுவது, அதிலும் தமிழ் தேசியம் பேசுபவர்களே சொல்லுவது அயோக்கியதனம் அல்லவா !

 

 

திராவிடம் வேண்டாம் ! ஆனால் ஈ.வெ.ரா. வேண்டும் ! என்பதற்கும், இந்தி, இந்தியம் வேண்டாம் ! ஆனால் காமராசர் வேண்டும் ! என்பதற்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை.

 

 

திராவிடம் வேண்டாம் என்றால் ஈ.வெ.ரா. என்னும் குறியீடும், அடையாளமும் வேண்டாம் ! என்பதை போல, இந்தி, இந்தியம் வேண்டாம் என்றால் காமராசர் என்னும் குறியீடும், அடையாளமும் வேண்டாம் என்பதே சரி !

 

 

ஈ.வெ.ரா.வை விட முடியாது என்பவன் தமிழ் தேசியத்தை கைவிட்டு, திராவிட அமைப்புக்குள் நீர்த்துப் போகட்டும் ! அதேபோல், காமராசரை விட முடியாது என்பவன் தமிழ் தேசியத்தை கைவிட்டு, இந்திய தேசியத்திற்குள் மூழ்கி போகட்டும் ! இனியும் தமிழர்களை ஏமாற்ற இயலாது !

 

 

காமராசரை முட்டுக்கொடுத்து தாங்கும் தமிழ் தேசிய தலைமையால் தமிழினம் பின்னடைவைத் தான் சந்திக்கும் ! எனவே, தமிழனுக்கு காமராசர் தேவையில்லை என்பதை சமரசத்திற்கிடமின்றி முடிவெடுத்தால் அன்றி, தமிழ் தேசிய அரசியலுக்கு வேறு வழி இல்லை.

 

 

காமராசர் தமிழ் இனத்துக்கு நேர்ந்த ஓர் மாபெரும் விபத்தாகும் !

 

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).     

 

தமிழ் தேசம் மலருமா ?!

 

தமிழ் தேசம் மலருமா ?!

 


உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழன், தான் வாழும் தேசத்தை தன் சொந்த தேசமாக கருதி, பாரபட்சம் இன்றி உழைத்து வளமாக்கினான், வளமாக்குகிறான். அவன் இந்த புவியின் மூல தேசிய இனமாதலால் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும், அதை தன் தேசமாகவே நேசிக்கிறான் !

 

 

“யாதும் ஊரே ! யாவரும் கேளீர் !!“ என்ற உயரிய நேசப் பண்பு தமிழனிடம் இருந்தே வெளிப்பட்டது !

 

 

“ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !!” என்பதெல்லாம் தமிழன் மீது ஒட்டிக்கொண்ட ஒட்டுண்ணியான திராவிடவாதிகளின் குரலாகும்.

 

 

இறை நம்பிக்கை, இறை மறுப்பு இவ்விரண்டையும் சாராத மானுடவியலின் தத்துவமாக வெளிப்பட்டது தமிழன் கணியன் பூங்குன்றனாரின் குரல்.

 

 

வரலாற்றில் எம் மூவேந்தர்களும் தமிழக மண்ணை மட்டுமே மாறி, மாறி ஆண்டு வந்தனர். வேங்கடம் தாண்டி வெற்றி பெற்ற போதும், கடல் கடந்து போரிட்டு வெற்றி பெற்ற போதும், வெற்றி பெற்ற பகுதிகளை அந்தந்த தேசியத்தின் நியமிக்கப்பட்ட மன்னர்களை கொண்டே ஆண்டு வந்தனர். அவர்கள் வெற்றி பெற்ற பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை என்றுமே பறித்ததில்லை.

 

 

இன்றைய நிலையில் இந்தியா என்ற கூட்டமைப்பில் தமிழனுக்கான இடம் பிரதிநிதித்துவமா ?! அல்லது அடிமைத்தனமா ?!

 

 

ஆரியமும், திராவிடமும் சேர்ந்து செய்த, செய்யும் துரோகமும், சதி செயலும் ஒன்றா, இரண்டா !

 

 

பிரிட்டானியனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இன்று எழுபது ஆண்டுகளுக்குள் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து, ஆரியமும், திராவிடமும் கூட்டுக் கொள்ளை இட்டு நிர்மூலம் ஆக்கினார்கள்.

 

 

இருபது நாடுகளின் ஒத்துழைப்போடு ஒரு தேசிய இனத்தின் வாழ்வியல் சுவடு கூடத் தெரியாமல் சுடுகாடாக்கியது யாருடைய நலனுக்காக !

 

 

இருபத்தி ஐந்து மைல் தொலைவில் இருந்தும் எங்களால் எங்கள் எதிரியை அடையாளம் காணாமல் இருக்க முடியுமா !

 

 

தமிழினம் சர்வ தேச ஒடுக்குதலில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளது.

 

 

உலகமயமாக்கலும், சர்வதேசியமும் தமிழனுக்கும் தேவையாய் இருந்தாலும், அதை தீர்மானிக்கும் உரிமை நமக்கானது (தமிழனுக்கானது) ஆகும்.

 

 

ஏகாதிபத்தியத்தின் அடிமையாகி போன இந்தியாவிற்குள் தமிழன் அடிமையா ! நீயோ அடிமை ! உனக்கு நான் அடிமையா ! என கேட்கும் நிலைக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்தை இந்திய அரசமைப்பு தரம் தாழ்த்தி உள்ளது.

 

 

ஒன்று பட்ட இந்தியாவிற்குள் தமிழ் இனத்தை அடைத்திருப்பது என்பது பெரும் மோசடியே ஆகும் ! உலக வரைபடத்தில் நாடுகளின் எல்லைகள் வரலாற்று நெடுகிலும் மாறாமல் நிலையாக இருந்ததாக வரலாறே இல்லை ! இனியும் அவ்வாறே இருக்கப் போவதும் இல்லை ! சூழ்ச்சியும், துரோகமும் தானே இந்திய வரைபடம் ! இந்த இலட்ணத்தில் பிராமணர்கள் எல்லோரும் யூதர்கள் வழி வந்தவர்கள் ! என்ற பொய் பிரச்சாரம் வேறு ! அகண்ட பாரதத்தை ஒடப்பில் போட்டு விட்டு, சர்வ தேச பாரதம் என்ற கற்பனையான சூழ்ச்சி கனவு வேறு ! அதாவது இந்துத்துவம் வல்லரசாக வேண்டுமாம் ! பிராமணர்கள் யூதர்களா என்பதை பின் வரும் பதிவுகளில் அலசுவோம்.

 

 

தமிழனை எப்படியாவது இந்துக்கள் ஆக்கிவிட துடிக்கிறது ஆரியம் ! திராவிடர்களாக அடையாளப்படுத்துகிறது வடுகம் !

 

 

இந்து என்பது மதம் அல்ல ! இந்து என்பது நாவழந்தீவில் வைதீக வந்தேரிகளால் மேலெழுந்த ஏக போக மேலாதிக்க அரசியல் !

 

 

திராவிடம் என்பது இனம் அல்ல ! தமிழ் தேசிய இனத்துக்குள் உட் புகுந்து ஒட்டுண்ணியாய் வாழ்ந்து வளம் கொழிக்க, வந்தேரி வடுக, கன்னட வல்லாதிக்கத்தை, தமிழகத்தில் நிலை நிறுத்தி, உலக தமிழர்களிடமும் மேலாதிக்கம் செலுத்திட துடிக்கும் ஒரு கற்பனா தேசிய இன மேலாதிக்க அரசியல் ஆகும்.

 

 

திராவிடம் என்பது இந்துத்துவ அரசியலின் நிழல் அரசியல் கோட்பாடாகும் !

 

 

அந்த இறுமாப்பில் தான் திராவிடத்தை யாரும் அழிக்க முடியாது என்கின்றனர் வடுகர்கள் !

 

 

ஆரிய, திராவிட அரசியலை உலக தமிழர்கள் புரிந்து வைத்திருப்பினும், பூர்வீக தமிழக மண்ணில் தமிழக மக்களை ஏமாளிகளாக்கி வைத்திருக்கிறோம் என்ற இறுமாப்பில் தான் அவர்களை இப்படி எல்லாம் பேச வைத்திருக்கிறது.

 

 

தமிழர்களை நாம் திராவிடர்கள் என்ற மனோ நிலையில் இருந்து மீட்க முடியாது ! என்றால், இந்து என்ற கருத்தியலில் இருந்தும் மீட்க முடியாது !.

 

 

தமிழர்களை இந்து என அறியப்படுகிற கருத்தியலில் இருந்து மீட்க முடியாது ! என்றால் திராவிடன் என்கின்ற மனோ நிலையில் இருந்தும் மீட்க முடியாது !.

 

 

தமிழனுக்கு கடவுள் உண்டு ! ஆனால் மதமில்லை !

 

 

தமிழனுக்கு அரசும், அரசியலும் உண்டு ! ஆனால் தேசம் இல்லை !

 

 

தேசத்தை அடைய தேசியம் வேண்டும் ! தேசிய இன பார்வை வேண்டும் ! தேசிய இன ஓர்மை வேண்டும் ! மொழிப் பற்று வேண்டும் !

 

 

உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டியது என்னவென்றால் நான் இந்து அல்ல ! திராவிடனும் அல்ல ! நான் மதமற்றவன் ! (தேவை பட்டால் உருவாக்குவோம்). நான் தமிழன் ! என இன்றல்ல, வழி வழி சந்ததி சமூகமாக சொல்லி வாருங்கள் ! தமிழ் தேசியம் தானே மேலெழுந்து வரும் ! தமிழ் தேசம் கண்டடையப் படும் !

 

 

பயணம் தூரம் தான் ! ஆனால் வெற்றி உறுதி !

 

தமிழரின் அடையாளம் கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/06/blog-post.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).