யார் தமிழர் ?!

 

யார் தமிழர் ?!


                       “ஏமாற்றியவன் திராவிடன் ! ஏமாந்தவன் தமிழன் !”


                                                   
யார் தமிழர்?! இப்படி ஒரு சர்ச்சைக்குரியக் கேள்வியை தமிழகத்தை தவிர வேறு எங்கும் கேட்க இயலாது. பெரும்பான்மையாக குவியலாக வாழும் ஒரு தேசிய இனம் தனக்கான அதிகாரத்தை கூட பெற முடியாமல் தொடர்ந்து பிற தேசிய இனத்தை சேர்ந்தவர்களை அதிகாரத்தில் அமர வைத்து அவர்களிடம் இறைஞ்சு கிடந்து, அடிமையாய் வாழ்ந்து வருகிறது.
யார் தமிழர் என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதானால் காலங்காலமாய் மரபு வழியாக தமிழ் யாருக்கு தாய் மொழியோ அவரே தமிழர் எனலாம்.

                                                    
இன்று தமிழர்களைப் பார்த்து யார் தமிழர் ?1! நாங்களும் தான் தமிழர் என்றும், பச்சை தமிழர் என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள். தமிழர்கள் குறித்து சமரசத்திற்கு இடமின்றி ஒர் வரையறை வைத்தாலன்றி நம்மை நாமே இனம் காண முடியாமல் போய்விடும்.

                                                     
தமிழ் மக்களின் மீதான அரசியல் அதிகாரத்திலும், அரசுத்துறைகளிலும், ஆன்மீக பண்பாட்டுத் துறைகளிலும் பெருவாரியாக மாற்று இனத்தை சேர்ந்தவர்களே கோலோச்சுவதால் தமிழர்களின் மெய்யியல் கேள்விக்குள்ளாகிறது. தமிழனின் பூர்வீகம் சர்ச்சைக்குள்ளாகிறது.

                                                       
தமிழர்கள் கடின உழைப்பாளிகள் உழைப்புக்கே நீண்ட நேரத்தை செலவிட்டு விடுவதால் தன் அரசியல் பொருளியல் சுரண்டலின் அதிகாரம் குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாததன் விளைவும், நல்லா பேசுபவன் எல்லாம் நல்லது செய்வான் என நம்பி சுயத்தை இழந்து நிற்கிறான். இருப்பினும், இன்றைய இளைய தலைமுறைகள் விழித்துக் கொண்டு விட்டார்கள். தமிழினத்தின் மீட்சி குறித்தும் மொழியை காக்கும் பொருட்டு போராட துணிந்திருக்கிறார்கள். இது இந்திய தேசியவாதிகளுக்கும், திராவிடவாதிகளுக்கும் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.

                                                    
கடந்த 02/01/2018 நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் பகுதியில் யார் தமிழர் என்ற நிகழ்ச்சி நடத்தப் பட்டது இதில் ஒரு தமிழ் தேசியவாதியும், ஒரு பெரியாரியவாதியும் அடங்குவர். பெரியாரியவாதி ஓவியாவுக்கு தமிழருக்கான வரையறைக்குள் .வெ.ரா.வை கொண்டுவந்தால் தான் நிம்மதி பிறக்கும். இன்னொருவர் தமிழ் தேசியவாதி ! மணியரசன் ! இவர், தான், ஒருவரைத் தவிர மற்ற எந்த தமிழ் தேசிய சிந்தனையாளர்களையும் தமிழ் தேசியவாதி என ஒப்புக் கொள்வதில்லை. இவர்கள் இருவரும் தெரிந்தோ தெரியாமலோ ஒருவரை ஒருவர் ஆதரித்து பேசுவதை பார்க்க முடிந்தது.

                                                 
வாழ் நாள் முழுவதும் தன்னை கன்னடன் என .வெ.ரா.வே அனைத்து மேடைகளிலும் ஒப்புக் கொண்டிருக்கும் பொழுது, இல்லை,இல்லை, நீ தமிழன் தான் எனக் கூறும் தமிழனின் இளிச்சவாய் தனத்தை கண்டு வியக்காமலிருக்க முடியவில்லை. தேசிய இனக் கொள்கையை வரையறுக்க ஓவியாவுக்கு விதியும் விதிவிலக்கும் தமிழினத்துக்கு தேவை என்கிறார். யார் தமிழன் என்ற வரையறைக்குள் ஒரு கன்னட தெலுங்கரை எப்படி விதிவிலக்காக தமிழனாய் பார்க்கமுடியும் ! ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தவர்களுக்கெல்லாம் தமிழினத்துக்குள் விதிவிலக்கு தர, தமிழனின் பிறப்புரிமை ஒன்றும் யாருடைய பாட்டன் சொத்தும் அல்ல.

                                                    
தமிழை நன்கு கற்று தேர்ந்து, திராவிட மொழி ஒப்பிலக்கணம் தந்த தமிழறிஞர் கால்டுவெல்லை தமிழரென்று சொல்ல முடியுமா ? தேம்பாவணி என்ற இலக்கியம் படைத்த இத்தாலி நாட்டு மத போதகர் வீரமாமுனிவர் என்ற ஜோசப் பெஸ்கியை தமிழன் என்று சொல்ல முடியுமா ? ஏன் ? இவர்கள் முத்தமிழ் அறிஞர் எனப்போற்றும் கலைஞர் கருனாநிதியை தமிழர் என ஏற்க முடியுமா ? அப்படித்தான் .வெ.ரா.வும் !. வேற்று இனத்தவர் ஒருவர் தமிழை நன்கு கற்று புலமைப் பெற்றிருக்கலாம். ஆனால் மரபு வழி தமிழனாய் இருந்தும் தமிழ் மொழி, இனம் குறித்து போதிய அறிவு இல்லாவிடினும், தமிழின மரபு வழிவந்த அந்த பாமரனே தமிழனாவான். தமிழ் கற்றவர் என்னதான் புலமை பெற்றிருப்பினும், தமிழனுக்காக தொண்டு செய்திருந்தாலும் வேற்று இனத்தவர் தமிழராகமாட்டார் என்பதே தேவநேய பாவணரின் பார்வை.

                                                      
.வெ.ரா.வுக்கு சாதி எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் தமிழனை ஏமாற்ற ஒரு தந்திர கோட்ப்பாடே அன்றி கொள்கையல்ல. அதனால் தான் அவரது வாரிசுகள், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனக்கூறி தமிழர்களிடம் அரசியல் செய்ய முடிந்தது. திராவிடமே .வெ.ரா.வின் கொள்கை ! பெரும்பான்மை தமிழர்களின் மீது சிறுபான்மை தேசிய இனங்களும், தேசிய மொழி சிறுபான்மையினரும் கொண்டுள்ள அதிகாரம் நிலைபெற்று இருக்க உருவாக்கப் பட்ட கொள்கையே திராவிடம் !. திராவிடத்தை நிலை பெறச்செய்ய, தமிழர்களிடம் என்றுமே தேசிய இன ஓர்மை உருப்பெற்றுவிடக் கூடாது என்பதற்காக சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு என்னும் தந்திரக் கோட்பாட்டை முன் வைத்தார் .வெ.ரா. ஏமாற்றியவன் திராவிடன் ! ஏமாந்தவன் தமிழன் !. இதைச் சொன்னால் திராவிடவாதிகளுக்கு நம் மேல் கோபம் பீறிட்டு வருகிறது. கடவுள் நம்பிக்கையாளர்களைப் போல திராவிடவாதிகளுக்கு கடவுள் மறுப்பும் ஒரு சமயமே என பாவணர் நிறுவுகிறார்.

                                                   
தமிழ் தேசிய பேரியக்க நிறுவனர் மணியரசனுக்கு ஓட்டெடுப்பு அரசியலுக்குள் தமிழர் தலைவர்களை அடையாளம் காட்ட தயக்கம் ஏற்படுகிறது. ஒரு விடயத்தை நாம் கவனித்தாக வேண்டும் தமிழனுக்கு அதிகாரம் வேண்டுமென்று சொன்னால் தூயவாதம் பேசுகிறார்கள் ஆனால் திராவிடனென்றால் வாயை பொத்திக் கொள்கிறார்கள். தமிழன் ஒரு அதிகாரத்துக்கு வர போராடினால் அவனை மாஃபியா என்கிறார்கள். இதுவரை ஆண்ட திராவிடவாதிகள் எல்லோரும் புனிதர்களா ! என்ற கேள்வி நம் கண் முன்னே விரிகிறது. திராவிட மாஃபியாக்களே கோலோச்சும் தமிழகத்தில் அவர்களை எதிர் கொள்ள ஒரு தமிழ் மாஃபியாவால் தான் முடியும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

                                                   
யாதவ மரபு வழியில் வந்த மணியரசன் தன்னை தமிழனாக அடையாளமிட்டுக் கொள்ள ஒரு வரையறையை முன் வைக்கிறார். மொழி வழி மாகாணப் பிரிவினையான 1956 க்கு முன் தமிழகத்தில் வாழ்ந்தவர்களையெல்லாம் தமிழர்கள் என்கிறார். இது எந்த வகை அடிப்படை சாராம்சம் கொண்ட வழிமுறை என்று தெரியவில்லை. தன்னை தமிழராக காட்டிக் கொள்ள அவர் எடுக்கும் முயற்சியில் தெலுங்கு, கன்னட, மராட்டிய பிராமணர்களும் தமிழர்களாகிவிடுகிறார்கள். இதை மறைக்கத் தான் .வெ.ரா. பிராமண எதிர்ப்புக்கு பதில் பார்ப்பன எதிர்ப்பு என்று சொல்லாடலை மாற்றினார். இதன் மூலம் பிராமணர்களை தப்பிக்க விட்டார். அதைத்தான் மணியரசனும் செய்கிறார். .வெ.ரா.வின் திராவிடத்தை விமர்சனம் செய்யும் மணியரசன் .வெ.ரா.வை எதிப்பதை போன்று அதே வேலையை செய்கிறார். பார்ப்பனரும் தமிழர் தான் என்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் கன்னட, மராட்டிய, தெலுங்கு பிராமணர்களும் தமிழ் பார்பனர்களுடன் தமிழர்களாகி விடுகிறார்கள்.

                                                    
இந்நிலையில் தமிழ் பார்ப்பனர்கள் தற்பொழுது மேட்டுக்குடி பிழைப்புக்காக தங்களை பிராமணர் என்று சொல்லிக் கொண்டாலும் பிறப்பால் அவர்கள் தமிழர்களே. அவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லித்திரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் கன்னட மராட்டிய தெலுங்கு பிராமணர்களை தமிழர்களாக்கத்தான் மொழிவாரிப் பிரிவினையை வைத்து தமிழர்களாக்கும் அரசியல் அரங்கேறுகிரது. இதே போல் மொழி வாரிப் பிரிவினையால் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்த பகுதி கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் மலையாளிகளுக்கும் வாரி வழங்கப்பட்டது ! அங்கு வாழும் தமிழர்களையெல்லாம் கன்னடர்களாக, தெலுங்கர்களாக, மலையாளிகளாக ஏற்றுக்கொண்டு அம்மாநில மக்கள் அரசியல் அதிகாரத்தை அளித்தார்களா ? இனியாவது அளிப்பார்களா ? தமிழனை தலைவனாக ஏற்ப்பார்களா ! அங்கெல்லாம் யார் கன்னடர் ? யார் தெலுங்கர் ? யார் மலையாளி ? என்ற சர்ச்சை ஏற்ப்படவில்லை.

                                                   
தமிழகத்தில் சாதி இருக்கும் வரை தமிழன் அதிகாரம் படைக்க முடியாது என்கிறார்கள். கர்நாடகாவிலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் சாதி ஒழிக்கப்பட்டு விட்டதா ! சாதியை ஒழித்துத்தான் அந்தந்த தேசிய இனத்துக்கான தலைவர்கள் உருவானார்களா !? மணியரசன் தன் மகனுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தேன் என்கிறார். வாழ்த்துக்கள் ! ஒன்று நிச்சயம் சாதியை ஒழிக்க முடியாது ! அது ஒரு இனத்துக்குண்டான குல அடையாளங்களாகும்.

                                                     
உலகம் முழுவதும் எல்ல இனத்துக்குள்ளும் குலம் என்னும் சாதிப் பிரிவினைகள் உண்டு. அது மக்களின் அடையாளமாகும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உண்டேயொழிய, குல தாழ்ச்சி, உயர்வு கிடையாது. பிராமணியம் உருவாக்கிய குல உயர்வு தாழ்வுதான் ஒழிக்க முடியுமே ஒழிய குல அடையாளத்தை ஒழிக்க முடியாது.

                                                  
பிராமணியத்தால் வகுக்கப் பட்ட உயர்வு தாழ்வு வேற்றுமையில் இருந்து தமிழினத்தை மீட்டெடுக்க தமிழினத்தை தமிழன் தான் ஆளவேண்டும். சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு இதுவெல்லாம் .வெ.ரா.வின் தந்திரக் கோட்ப்பாடாகும். வெவ்வேறு சாதிகளில் பிறந்தவர்கள் விருப்பத்தின் பேரில் மணந்து கொண்டாலும், மணந்து கொண்ட இருவரில் ஒருவரது சாதியாவது அடையாள தேவை கருதி தன் சாதிக்குள் அவர்களையோ அல்லது அவர்களின் வாரிசுகளையோ தன்னுள் உமிழ்ந்து உள்ளடக்கி விடும். இதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை. சாதி ஒழிப்பு என்பது கடலில் கல்லெறிந்து அலையை உண்டாக்கி விடுவேனென்று சூளுரைப்பது போன்றது.

                                                   
அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் சார்பில் விவாதித்த ஆளூர் ஷாநவாஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் ஆதி தமிழர்கள் அல்ல ! ஆதி திராவிட கோட்ப்பாடு கொண்டவர்கள் ! ஆரியமும் திராவிடமும் ஒன்றே, இரண்டும் தமிழனுக்கு எதிரானது என்றும் தேவநேய பாவணர் என்றோ திறம்பட நிருவி விட்டார். திருமாவளவனுக்கு மிக நன்றாகத் தெரியும் சாதியை ஒழிக்க முடியாது என்று. இருக்கும் வரை தன் சாதிக் காரனை குழப்பி திராவிடவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்துக் கொண்டு முடிந்தவரை காலத்தை ஓட்டிவிடலாம். சாதி வேற்றுமைகள் நீக்கப் பட்டுவிட்டால் தன் அரசியல் இருத்தல் காலாவதியாகிவிடும் அதற்காகவே ஆரிய திராவிட அரசியலை காப்பாற்ற அந்த அரசியல் வலைக்குள்ளேயே வலம் வருவார். சாதிக் கட்சிகளை பொருத்தவரை சாதி வேற்றுமை இருந்தே ஆகவேண்டும் அப்பொழுது தான் பிழைப்பு ஓடும்.

                                                   
சாதி வேறுபாடற்ற தமிழ் தேசியம் படைக்க தமிழன் அரசியல் மற்றும் அரசு, அதிகாரத்துறை அனைத்தையும் கைப்பற்ற வேண்டும்.

                                                      
தமிழகத்தில் வாழும் பிறதேசிய இனங்களின் வாழ்வும், வளமும் தமிழர்களின் வாழ்வு வளத்துடன் பிண்ணி இருக்கிறது என்பதை உணர்ந்து, தமிழன் அதிகாரம் படைக்க, தமிழனுக்கு உதவிட வேண்டுமேயொழிய, தமிழனை வீழ்த்தி தமிழன் மீது அதிகாரம் படைக்க துடிப்பது, தமிழர் அல்லாதாரின், இருத்தலை, வரும் காலத்தில் தமிழர்கள் கேள்விக் குள்ளாக்குவார்கள் என்பது உறுதி.

            “
தமிழா விழித்திடு ! ! ஆரிய திராவிட கருத்தியலை அழித்திடு ! ! ”

 

அன்னிய இனப்பெண்ணை மணந்த தமிழன் தனி தமிழ் பேசலாமா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2015/10/blog-post.html
-
தமிழர் வரலாற்று கழகம்.

 

2 கருத்துகள்:

  1. அருனையான பதிவு
    இந்தக் கருத்தில் நான் முழூமையாக உடன்படுகிறேன்
    தங்களின் இந்தக் கருத்திற்க்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. தமிழினம் என்ற கருத்தியல் நன்று, ஆனால் தமிழினத்தைத் தமிழ் நாட்டுக்குள் மட்டும் முடக்குவது எந்தவகையில் நியாயம்? தமிழ் நாட்டைத்தவிர வேறு இடங்களில் தமிழர்கள் இல்லையா, குறிப்பாக இலங்கையில். "தமிழர் வரலாற்றுக் கழகம்" தமிழர்கள் தமிழ் நாட்டில் மட்டும்தான் என்று பதிவிடுகிறதா? தமிழ் நாட்டுக்கு வெளியிலும், வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்கள் தமிழினத்துக்குள் ஏன் உள்வாங்கப்படவில்லை?

    பதிலளிநீக்கு