தாழ்த்தப்பட்டவனின் தமிழ் தேசியப் பார்வை !!தாழ்த்தப்பட்டவனின் தமிழ் தேசியப் பார்வை !!
தலையில் பிறந்தவன் பிராமணன்.
தோளில் பிறந்தவன் சத்திரியன்.
தொடையில் பிறந்தவன் வைசியன்.
காலில் பிறந்தவன் சூத்திரன்.

                            பஞ்சமராகிய நாங்கள் மனித பிறப்பிலேயே சேர்க்க தகுதியற்று ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் எங்களையும் அரியின் சனங்கள் என்று காந்தியார் சூட்டிய பட்ட பெயர் மீண்டும் எங்களை இந்து மதத்துக்குள்ளும், பிராமணீய வருணாசிரம சாதிய அடுக்கினுள் இருத்தி வைத்ததோ, அதை போலவே இந்த தமிழ் மண்ணின் மூத்த முதல் குடி மக்களாகிய எங்களை இந்த மண்ணோடே தோன்றி, இந்த மண்ணோடே வளர்ந்து, வாழ்ந்து வரும் ஆதிகுடி மக்களாகிய எங்களை, நாங்கள் வளர்த்த இந்த மண்ணின் பெயரால், நாங்கள் வளர்த்த மொழியின் பெயரால், ஆதி தமிழர்கள் என்று அடையாளப் படுத்தாமல் உண்மை அடையாளாங்களை மறைத்து இல்லாத திராவிட தேசியத்தின் (இந்திய தேசியம்) பெயரால் அழைப்பது காந்தியின் அரிசனங்கள் என்பதற்கும், பிராமணானின் பஞ்சமன் என்பதற்கும் பெரியாரின் திராவிடன் என்பதற்கும் என்ன வேறுபாடு ??

எங்களை இந்த காந்தியின் அரிசன அடையாளமோ, அதற்க்கு மாற்றாக வந்த திராவிட தேசியத்தின் ஒரு பிரிவான ஆதி திராவிடன் என்ற அடையாளமோ எங்களின் சாதிய இழிவை போக்கியதா ! இல்லையே ! ஏனென்றால், இல்லாத திராவிட இனம் ,இருக்கின்ற தமிழினத்தின் மானுட இழிவை எப்படி ஒழிக்கும். திராவிட இனம் என்பது இந்திய தேசியத்தின் மற்றொரு கற்பனை வடிவமே. ஏனென்றால், இல்லாத திராவிட இனம் இருக்கின்ற தமிழ் இனத்தின் மீது பிராமணிய சூழ்ச்சியால் விளைந்த மானுட இழிவை எப்படி ஒழிக்கும். திராவிட இனம் இந்திய தேசியத்தை ஒத்த மற்றொரு கற்பனை வடிவமே. திராவிட தேசியம் என்று ஒன்று இல்லாதது போலவே, இந்திய தேசியம் என்று ஒன்று இல்லவே இல்லை. திராவிடம் பேசுவதென்பது ஆரிய பிராமணிய ஆளுமைக்கு போட்டியாக அதை ஒத்த அதற்கு இணையான ஒரு மேட்டு குடித்தனமான ஆளுமை போக்கே அன்றி ,வேறொன்றும் இல்லை.

பிராமணியத்தால் உருவாக்கப்பட்ட சாதிகள் திராவிடத்தால் முன்பைவிட அதிகம் செழுமை அடைந்துள்ளன. திராவிட இனம் என்னும் போக்கு பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அரசியல் மற்றும் பண்பாட்டுத்தளங்களில். சொறிந்து கொள்ளும் மாய கருவியே ஆகும். பிராமணியம் சாதியை உருவாக்கி பல நூற்றாண்டுகள் ஒரு மைல் கல் தொலைவிற்கு நகர்த்தியது. திராவிடமோ அது முற்றிலும் தவறு எனக்கூறி, அதே சாதி பண்பாட்டை முற்ப்போக்கு என பொய் சொல்லி செழுமை படுத்தி சுமார் ஐம்பதாண்டுகளில் பல நூறு மைல் கல் தொலைவிற்கு அழைத்து வந்து விட்டது. பிராமணியத்தின் விருப்பத்தை அவர்களை வசை பாடிக்கொண்டே அவர்களை விட சாதியை சிறப்பாக பேணி பாதுகாத்தும், சாதி சண்டையையும் முரண்பாட்டையும் அதிகம் உண்டாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடியும், பண்பாட்டு மோசடிகளை முற்ப்போக்கு பாத்திரம் என்று கூறியும் தமிழினத்தை மோசம் செய்து வருகிறார்கள்.

ஆரியனுக்கும் திராவிடவாதிகளுக்கும் இடையிலான ஆளுமை போட்டியே திராவிட இனவாதம். ஆரியனும் திராவிடனும் சேர்ந்து தமிழர்களை அரசியலிலும் பண்பாட்டிலும் ஏமாற்றிவிட்டு, பொருளாதார தளத்தில் கூட்டுக் கொள்ளை அடிப்பதும், கொள்ளையிட்ட பொருளை பங்கு வைப்பதில் முரண்பாடு வரும் பொழுது ஆரிய திராவிட போர் என்று முழக்கம் இடுவதும் நம் கண் முன் விரியும் நிதர்சன உண்மை.

ஈ.வெ.ரா.வால் துவக்கிவைக்கப்பட்ட திராவிடதேசிய அரசியல் இந்திய அரசியலையே ஆட்டிவைக்கும் சக்தியாக உருவெடுத்தும் தாழ்த்தப்பட்டவனின் மீதான இழிவு இன்னும் போகவில்லையே ! நம்மில் சிலர் புலி, சிறுத்தை என்றெல்லாம் ஆவேசமாக பேசி, நம்மை திராவிடவாதிகளிடம் அடகுவைத்துவிட்டு ஆரிய, திராவிட கூட்டு அரசியல் கொள்ளையில் கூட்டாளிகளாகி போனார்களே ! எப்படி துடைக்கப் படும் தாழ்த்தப்பட்டவன் மீது சுமத்தப்பட்ட இழிவு.

முதலாளியை கொன்றுவிட்டால் முதலாளித்துவம் அழிந்துவிடுமா ?? உழைக்கும் மக்கள் முதலாளித்துவ அரசியலை புதைகுழியில் தள்ளினால் தானே உரிமை பெற முடியும். முதலாளியின் மூலதனம் உழைக்கும் மக்களை கொள்ளையிட்ட பொருள்கள் அல்லவா !! ஆரியனோடு கூட்டு அரசியல் நடத்துபவன், சர்வ தேச சீரழிவு பண்பாட்டையும் மற்றும் கலாச்சாரத்தையும் தன் சொந்த ஊடகங்கள் மூலம் கொடுத்து நம் பாரம்பரிய பண்பாட்டை சிதைப்பவன் மற்றும் ஆரிய கூட்டணியில் உழைக்கும் மக்களின் பணத்தை கோடி கோடியாய் கொள்ளை அடித்து நம் பொருளாதாரத்தை சுரண்டுபவன், சுரண்டுகிறவனையும் காப்பாற்றுபவன், தமிழ், தமிழ் என்று கூறி தமிழனின் உண்மையான பாரம்பரிய, தொன்மையான அடையாளங்களை மறைப்பவனே திராவிடவாதி.

எப்படி நம்மை விட்டொழியும் நம் மீது சுமத்தப்பட்ட சாதிய இழிவு.

மறைக்கப்பட்ட தமிழர்களின் தொன்மை அடையாளங்களையும் வரலாற்றுப் பெருமைகளையும் மீட்டெடுப்பதன் மூலம் மட்டுமே சாதிய இழிவை நீக்க முடியும்.

பிராமணியம் மற்றும் திராவிடத்தின் வரலாற்று சூழ்ச்சிகளை உலகம் அறியவும், தமிழ் இனத்தின் மீதான ஒடுக்குமுறையிலிருந்து விழித்தெழுவதன்  மூலம் மட்டுமே வரணாசிரமத்தை உடைத்தெறிய முடியும். பிராமணியத்திற்கு மாற்று திராவிடமல்ல ! இரண்டும் ஒன்றே ! இவ்விரண்டுக்கும் மாற்றும், தீர்வும் தமிழ் தேசியமே.  

வாழ்க தமிழ் !! வெழ்க தமிழ் தேசியம் !!