தமிழன் இந்துவுமல்ல! திராவிடனுமல்ல !!


தமிழன் இந்துவுமல்ல! திராவிடனுமல்ல !!


                                                      

   இந்துதுவவாதிகள் சொல்லுகிறார்கள்:- தமிழனா ! தமிழனுக்கென்று ஏது தனித்த அடையாளம் ! இந்து மதம் தானே தமிழனுக்கு அடையாளம் ! என்கிறார்கள்.

                                                   
திராவிடவாதிகள் சொல்கிறார்கள் :- தமிழனா ! தமிழனுக்கு ஏது தனித்த தேசிய இன அடையாளம் ! (வடுக, கன்னட, மலையாள, மராட்டிய இன்னும் பல சிறு கூட்டங்களையெல்லாம் உள்ளடக்கிய) திராவிடம் தானே தமிழனின் அடையாளம் ! என்கிறார்கள்.
தமிழன் இந்து அல்ல. நான் மதமற்றவன் என்று சொல்லுங்கள் என்றால் இந்து தமிழனெல்லாம் பாய்கிறார்களே ! அதேபோல் தமிழன் திராவிடனல்ல என்று சொல்லுங்கள் என்றால் திராவிட போதை தலைக்கேறிய தமிழர்கள் நம் மீது பாய்கிறார்களே ! சொந்த அறிவு தான் இல்லை பட்டறிவுமா இவர்களுக்கு இல்லை.
                               
                                                     
நாம் இந்து என்றால் இரண்டு இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஆதரித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்களே இந்த இந்திய இந்துக்கள். இலங்கைக்காரன் நானும் ஆரியன் நீயும் ஆரியன் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் என இந்தியாவை அழைத்திருக்கமாட்டானே.

                                                   
இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் ரயிலில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் நடந்த சண்டையை பெரிது படுத்தி நாட்டை கொழுத்திப் போட்டு உலுக்கினார்களே ! இந்த இந்திய இந்து, இலங்கை விடயத்தில் மட்டும் மெளனம் காத்தார்களே ஏன் ? கேட்டால் அது அடுத்த நாட்டு உள்விவகாரம், நாங்கள் படையெடுத்தா போக முடியும் ?என்கிறார்கள். வங்காள தேசத்திற்கு படையெடுத்தீர்களே நாங்கள் மறந்து விட்டோமா ?
               
                                                    
இலங்கைக்காரன் சொல்லுகிறான் :- நாங்கள் எங்கே யுத்தம் செய்தோம் ? எங்களால் புலிகளை அழிக்க முடிந்திருந்தால் என்றோ அழித்திருப்போமே ! எங்களுக்கு ஏது ? அவ்வளவு பெரிய சத்து. புலிகளை அழித்ததும், தமிழர்களை கொன்று குவித்ததும் இந்திய அரசின் கூட்டு படைகள் தானே ! இந்திய அரசு தானே அதற்கு தலைவன் என்கிறான். இந்த இந்திய அரசுக்கு துணை போனவர்கள், நாட்டை கூட்டுக் கொள்ளையிட நம் கண்ணைக்கட்டி தமிழனல்ல நாம் திராவிடர்கள் என்று சொன்ன திராவிட வாதிகள் தானே !

                                                   
தன்னை இந்து என்றும், திராவிடனென்றும் எண்ணி மோசம் போய் கொண்டிருக்கிறோமே !

                                                   
நம்மை அழித்து வருபவர்கள் இந்துத்துவவாதிகளும், தென் ஆரிய திராவிடவாதிகளும்தானே !

                                                    
தன்னை இந்து என்றும், திராவிடனென்றும் எண்ணி மோசம் போய் கொண்டிருக்கிறோமே ! நம் இனத்தை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறார்களே ! நமக்கு இன்னுமா புரியவில்லை ?
பாரதி பாடினான் என்று தீரும் எங்கள் சுதந்திர தாகம் ! என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம் !! என்றானே அவன் ஆதங்கம் புரியவில்லையா ! தாகம் குடித்தால் தீர்ந்துவிடும் ஆனால் மோகம் அனுபவித்தால் தான் தீரும். ஆனால் தமிழனுக்கோ இந்த அடிமை மோகம் அனுபவித்தும் இன்னும் தீரவில்லையே இவன் மயக்க நிலையில் இருந்து என்று மீளுவான் !

                                                  
இவனுக்கென்று ஒரு சமயம் ( மதம் ) இருந்து, அது உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச ஆளுமையை இறை நம்பிக்கை மூலம் நிலைப்படுத்தியிருந்தால் தொன்மையான தமிழினம் இன்று அடிபட்டு, அடிமைப்பட்டு, அடையாளத்தைத் தொலைத்து மயக்க நிலையில் இருக்குமா?
             
                                                     
பாலஸ்தீனத்தில் பத்து முஸ்லீம் கொல்லப்பட்டால், தமிழ் நாட்டு தமிழ் முஸ்லீம் பத்தாயிரம் பேருக்கும் மேல் திரண்டு அமேரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்கிறான். ஆனால் தமிழனை இந்தியாவோடு கூட்டுச் சேர்ந்து பாக்கிஸ்தான்காரனும் கொலை செய்கிறான். ஒரு இஸ்லாமிய நாடுகூட ஈழதமிழன் படுகொலைக்கு எதிராக பேச முன் வரவில்லை.

                                             
கம்யூனிசம் பேசும் ரஸ்யா, சீனா, கியூபா என்று தமிழனுக்கான எதிரிகள் வரிசை நீண்டுகொண்டே போகிறது. ஒரு இனத்தின் தேசிய சுய நிர்ணய உரிமையை மற்ற நாடுகளுக்கு பொருத்தும் இந்த கம்யூனிஸ்ட்டுகள் தமிழனுக்கு மட்டும் மறுக்கிறார்கள். தமிழனுக்கு எதிராக .நா.வில் வாக்களிக்கிறார்கள்.

                                                      
இவர்கள் நாடுகளில் உள்நாட்டு யுத்தம் நடந்தால் அது புரட்சி. தமிழன் தன் சுய நிர்ணய உரிமைக்கு போராடினால் அது பயங்கர வாதமா !? உலகில் எங்கல்லாம் அடக்குமுறை தலை எடுக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று சொன்ன சேகுவேரா என்ற சர்வதேச புரட்சிகாரன் உயிருடன் இருந்திருந்தால் அவனிடம் நியாயம் கேட்கலாம். இருந்தாலும் அவனும் இந்த போலி கம்யூனிச நாடுகளோடு கூட்டுச் சேர்ந்திருப்பான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

                                                     
உலகில் அனைத்து அரசியல் சக்திகளுடனும் சமரசம் செய்து கொண்டு யார் ஆள வேண்டும் யார் அழிந்து போகவேண்டும் என தீர்மானிப்பது மதமே ஆகும். மதத்தில் இருந்து ஆளும் வர்க்க ஏக போக அரசியல் பொருளாதாரத்தை பிரித்துப் பார்க்க இயலாது. தமிழனுக்கென்று மதம் இல்லாததால் தான் சர்வதேச அரசியலை தன் பங்குக்கு முடமாக்க தகுதி அற்று போனான் என்பதாலேயே தமிழனுக்கு தனி ஒரு மதம் தேவை என எழுதினேன். அதை சிலர் கொச்சைப் படுத்துகின்றனர் ஆனால் தீர்வு சொல்லுவார் யாரும் இல்லை.

                                                   
நம் கடவுள்களை தான் வைதீகத்தால் விளைந்த இந்து மதம் திருடி உருவமாற்றம் செய்து ( மீசையை சிராய்த்து உடையை மாற்றி ) வைத்திருக்கிறார்கள். நம் கொள்கைப் படி நம் கடவுள்களை இயக்குவதை விட்டு விட்டோம். இந்துத்துவவாதிகள் நம் கடவுளை கருவறையில் பூட்டி வைத்துக்கொண்டு இயக்குகிறார்கள் நாமும் அடிமை ! நம் கடவுளும் அடிமை !! நாங்கள் இந்துக்கள் அல்ல ! தமிழர்களென்றும், நாங்கள் திராவிடர்களல்ல தனித்த தமிழ் தேசிய இனமென்றும் என்றைக்கு முழங்குகிறோமோ அன்றைக்குத்தான் நம் கடவுள்கள் பிராமணர்களின் கருவறையை உடைத்துக்கொண்டு வெளியே வருவார்கள். திராவிடப் பித்துக்கு மருந்து தருவார்கள். நமக்குத் தலைவர்கள் ஆவார்கள். நம் விடுதலையை பெற்றுத்தருவார்கள்.
(
இந்த வரிகளின் உட்பொருளை வறட்டு நாத்திகர்கள் போல் அரிய முயலாமல் நுணுக்கத்துடன் புரிந்து கொள்ளவும்)

                                                     
இந்துத்துவம் (ஆரியம்), திராவிடம் இரண்டும் நம்மை ஒரே ஊருக்கு அழைத்துச் செல்லும் ஒன்றிணையா இரு தடையங்கள் ஆகும்.

                                                     
இந்துத்துவக் கொள்கை, மொத்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அடிபணிந்து சேவை செய்ய மதத்தின் பெயரால் நம்மை நிர்பந்திக்கிறது.

                                                      
திராவிடக்கொள்கை தமிழன் மேல் அரசியல், பொருளாதார ஆதிக்கம் செலுத்தும் வடுக, கன்னட, மலையாள பெரு முதலாளிகளாகிய ஆளும் வர்க்கத்திற்க்கு அடிபணிந்து, இனமானத்தை மறந்து திராவிடத்திற்க்காக உழைக்கும் படி நம்மை ஆணவத்துடன் நிர்பந்திக்கிறது.

                                                   
இந்துத்துவ கொள்கை தமிழனையும் ஆரியன் என்கிறது ஆனால் சூத்திரன் (தமிழன்) என்பவன் ஆரியன் ஆகும் வரிசையில் கடைக்கோடியில் நிற்கும் கலிசடைகள் என்கிறது.

                                                 
திராவிடக் கொள்கை தமிழனையும் திராவிடனென்கிறது ஆனால் தமிழன் தனித்து இயங்க வழி தெரியாதவன், தனக்கென்று தலைமையோ, தலைவனோ இல்லாதவன், பகுத்தறிவு இல்லாத முட்டாள்கள். எதற்க்கெடுத்தாளும் பல் இழித்து ஒருவனை ஒருவன் பின்னுக்குத் தள்ளி மனம் போன படி வாழுகின்ற காட்டுமிராண்டிகள் என்கிறது.

                                                        
இதிலிருந்து என்ன தெரிகிறது ! நம்மை இந்து என்று ஒத்துக்கொண்டால் கலிசடைகள் ஆவோம் ! திராவிடனென்று ஒத்துக் கொண்டால் காட்டுமிராண்டிகள் ஆவோம் ! ஆக நாம் கலிசடைகளுமல்ல, காட்டுமிராண்டிகளுமல்ல. நாங்கள் தமிழர்கள். ஆகவே
தமிழன் இந்துவுமல்ல !! திராவிடனுமல்ல !!

 

ஆரிய திராவிடன் தமிழ்நின் மடி பறித்தக் கதையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2015/11/blog-post.html