தமிழனுக்கு தனி ஒரு மதம் தேவையா


தமிழனுக்கு தனி ஒரு மதம் தேவையா?!அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்! என் வேண்டுகோளை ஏற்று என்னுடன் தொடர்பில் இருப்பதற்க்கு நன்றி! தமிழர் வரலாற்று கழகம் என்ற இந்த தடம் காலத்தின் தேவை கருதியே தொடங்கப்பட்டுள்ளது.


பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் தமிழனின் வரலாற்றை சொல்லுகிறார்கள். சிலர் சரியாகவோ சிலர் அரசியல் நோக்கத்துக்காக திரித்தோ சொல்லுவதுண்டு. இலக்கிய ஆய்வாளர்கள் நம் இலக்கியத்தின் தொன்மையை ஆய்வுசெய்து நம் வரலாற்றின் கடந்த காலங்களை அறிய செய்கிறார்கள். தமிழ் ஆன்மீக அறிஞர் பெருமக்களோ மதம் என்ற வரையறைக்குள் யாரும் அடங்கிவிட முடியாத பல்வேறு வாழ்வியல் நெறிமுறைகளை நமக்கு அளித்து சென்றிருக்கிறார்கள்.


ஆனால் இவை எல்லாம் பல்வேறு தளங்களாக பிரிந்து கிடக்கின்றன. இதை நாம் கடந்து வந்த அரசியல் சூழலோடு ஒப்பிட்டு தெளிவாக விளங்கபடுத்துவார் யாரும் இல்லை. எனவே நமக்கு சரியான நிலைபாட்டிற்க்கு வரமுடியாமல் சில நேரம் சரியாக புரிந்து கொள்வதும் பின் சரியையே தவறு என நினைத்து தவறை சரியென புரிந்து கொள்வதுமான குழப்பநிலையே ஏற்படுகிறது.

 

                                                                தமிழர்கள் நன்றி உள்ளம் கொண்டவர்களும், எளிதில் உணர்சிவசப்படக் கூடியவர்களும், தியாக உள்ளம் கொண்டவர்களும் ஆவார்கள். அது இந்த மண்ணின் மாண்பு இதுவே நம் வரலாற்றின் நெடுகிலும் தமிழனின் வீழ்ச்சிக்கு காரனமாயிருந்திருக்கிறது.


இப்பூலோகத்தின் முதன்மையும் மூத்த குடியுமான தமிழினம் வேங்கடத்திற்க்கு வடக்கிலிருந்து யாரும் யுத்தத்தால் வெற்றி கொள்ள முடியாத பேராற்றலரசுகளாக விளங்கிற்று. அப்படி பட்ட அரசுகள் பிற் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்து சிறுமைப்பட்டு அன்னிய ஆட்சி அதிகாரத்தில் சிக்கி அடிமைகளாகி போனார்கள். அன்று வடக்கிருந்து பிழைப்பு தேடி வந்த பிராமணியத்திடம் மண்டியிட்ட மூவேந்தர்களின் மடைமையால் அடிமைப்பட்டு போன தமிழ் தேசிய இனம் தன் சொந்த சைவ, வைணவ(மாலிய), ஆசிவக சித்தாந்தங்களை களவு கொடுத்து விட்டது.


இங்கே நெய்யப்படும் துணி மும்பை சென்று வேறு கம்பெனிகள் பெயரில் நம்மிடமே வந்து ஆளுமை செலுத்துவதை போல நம் அறிவால்,உழைப்பால்,நம் சிந்தனையால் கண்டறியப்பட்ட ஆன்மீக தத்துவங்களும், கடவுள் பற்றிய வேதாந்தங்களும் திருடப்பட்டு, வடக்கே சென்று இந்து கம்பெனியாக உருவ மாற்றம் செய்யப்பட்டு அரசியல் அதிகாரத்தோடு மதமாக நின்று, நாம் நம் அடையாளங்களை கண்டறிந்துவிட முடியாதபடி, இணக்கம் காண முடியாத மக்களாக சாதி,சாதியாய் தனக்குள் பகை கொண்ட தேசிய இனமாய் உருவாக்கி வைத்து விட்டது.

 

இந்து கம்பெனிகள் வைத்திருக்கும் கடவுள்களில் முதன்மை கடவுள்கள் அனைவரும் நம் ஆன்மீக சித்தாந்தத்தின், திணை வாழ்வின் முன்னோர்களும் தலைவர்களும் ஆவார்கள் மற்றவை எல்லாம் இடைச்சொருகலும், கதைகளும், கற்பனைகளும், கட்டுக்கதைகளும் ஆகும். நமக்கென்று ஓர் மத கம்பெனி இல்லாது இருந்தமையால் அந்த வெற்றிடத்தை நம் அன்னிய மத கம்பெனி வந்து நிரப்பிற்று.


அது நம் தேசிய இனத்தின் மீது தனக்கு சாதகமான ஒரு ஆட்சி அதிகாரத்தை நிறுவி தமிழர்களை அடிமைகளாகிற்று. இந்த அடிமைத்தனத்திற்க்கு எதிராக இம் மண்ணிலேயே தோன்றிய ஆசிவகம் என்னும் மத நிறுவனமும் அழிக்கபட்டு அதன் மத அடையாளங்களும், அதன் கடவுள்களும் இந்து மத கம்பெனிகளின் அடையாளங்களாகவும், கடவுளின் அவதாரங்களாகவும் ஆக்கப்பட்டு விட்டது.


கிராமப்புறங்களில் உள்ள குல தெய்வ வழிபாடாகவும், கிராம தெய்வ வழிபாடாகவும் இன்றும் நிலை கொண்டிருக்கும் கடவுள் வழிபாடே தமிழனை அடையாளம் காண வகை செய்கிறது.

 

                                                                     முகமதியர்களின் ஆட்சி அதிகாரத்திலும், அதன் பின் ஆங்கில ஆட்சி அதிகாரத்திலும் பணத்திற்க்காகவும், பதவிக்காகவும், சொத்து சுகத்திற்க்காகவும், காட்டி கொடுத்தும், சேவகம் செய்தும் பிழைத்த அடிமை தமிழர்கள் போக மீதி உள்ளவர்களையெல்லாம் இந்துக்கள் என முத்திரையிட, இந்தியா என்ற கட்டமைப்பில் சிக்கி போனதால் இந்து என்ற அடையாளத்தை மறுக்க அதிகாரமற்று அதை, தன் கடவுள்கள் எப்படி அவர்களிடம் சொல் பேச்சு கேட்டு கருவரையில் அடிமையாய் இருகின்றார்களோ,அதை போலவே தானும் இந்துவின் அடிமையாய் வாழ்கிறான்.


நாம் உருவாக்கிய சைவம்,வைணவம்(மாலியம்) இரண்டிற்க்கும் ஆன்மீகத்தின் மூலமானது தமிழக மண்ணில் இருக்கிறது. இந்த இரண்டு மார்க்கத்தின் கடவுள்களும் நாம் கண்டறிந்த கடவுள்கள் அல்லவா!? நம் மூவேந்தர்களையும் மடையர்களாக்கிய பிராமணியத்திடம் நம் கடவுள்களை பறி கொடுத்துவிட்டு நாமும் அல்லவா! அடிமையாகி போனோம்.

 

தமிழனுக்கென்று ஒர் மதம் இல்லாது போனதால் பிற தேசிய இனங்களிடம் நாம் அடிமை பட்டு போனோம் அல்லவா! உலக வரலாற்றில் அனைத்து தேசிய இனங்களுக்குள்ளும் ஓர் மதம் ஆதிக்க கோலோச்சுகிறதென்பதை கவனிக்கவும். அவ்வப்போது அது ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதும் பிற தேசிய இனங்களிடம் அடிமை பட்டு போகாமல் அல்லது அடிமை தனத்திலிருந்து மீட்டெடுக்க ஓர் மதம் அரசியல் செய்வதை வரலாற்று நெடுகிலும் நாம் காண முடிகிறது.

 

                                                               இஸ்ரவேலர்களுக்கு(யூதர்கள்) ஒரு மோசே முன்னின்றது போல் தமிழர்களுக்கு ஒருவர் இல்லாது போனதால் தானே நம் அடிமைத்தனம் தொடருகிறது அடிக்கடி அன்னிய படையெடுப்பால் சிதறுண்டு போன யூதர் இனம் தனக்கென்று சொந்த வாழ்விடம் கூட இல்லாது இருந்தது. பின்னாளில் படிப்படியாக தங்களின் சர்வதேச அரசியல் சூழ்ச்சியால் ஒரு இடத்தை இப்பூமியில் உருவாக்கி கொண்டதோடல்லாமல் உலகையே அச்சுறுத்தும் உளவு நிருவனமாக பரிணமிப்பதற்கு பின்ணனியில் ஒரு யூதமதம் கோலோச்சி நிற்ப்பதை நாம் காண முடிகிறதல்லவா!

 

அரேபியர்களின் சர்வதேச அரசியல் மேலாண்மைக்கு முகம்மது என்பவர் உருவாக்கிய இஸ்லாமிய மதம் பின்ணனியில் இருக்கிறதல்லவா!


ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களை படுகொலை செய்ததிலும், மீதி தமிழர்கள் அனாதைகள் ஆனதற்க்கும் இந்திய, இலங்கைக்கு பின்னால் ஒரு புத்தமதமும் ஒரு இந்துமதமும் இருக்கிறதல்லவா! உலக அரசியலே மறைமுகமாகவோ, நேரடியாகவோ மதத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது தமிழனின் அரசியல் மட்டும் மதமின்றி இருந்தால் அது சர்வதேச அரசியலை ஆட்டி வைக்க முடியுமா? இந்த தமிழர்களை தமிழர்கள் என்று ஒரு குடையின் கீழ் ஒற்றுமை படுத்ததான் முடியுமா? இது தவிர தமிழனை ஒன்று சேரவிடாமல் தடையாய் இருக்கும் அரசியல் சக்திகள் எது தெரியுமா? ஆரியமும்! திராவிடமுமே!!.


(இதன் பின்ணனியில் உள்ள அரசியல் அடுத்த தொடர்ச்சியில் தொடரும்…………………………………………………………….)

 

ஆரியமும் திராவிடமும் கட்டுரை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2015/10/1.html